Monday, January 31, 2011

தாயே வணங்குகிறோம் !




இனிய நீர்
இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்

வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்


கோடிக் கோடிக் குரல்கள்
உன் திருப்பெயர் முழங்கவும்
கோடிக் கோடிக் கரங்கள்
உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்
அம்மா ! 'அப்பா ! என்று உன்னை அழைப்பவர் எவர் ?
பேராற்றல் பெற்றவள்
பேறு தருபவள்
பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்


அறிவு நீ
அறம் நீ
இதயம் நீ
உணர்வும் நீ
எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ
எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ
எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்
தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ
தாயே வணங்குகிறோம்


ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்
அன்னை துர்க்கை நீயே
செங்கமல மலர் இதழ்களில் உறையும்
செல்வத் திருமகள் நீயே
கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே
தாயே வணங்குகிறோம்


திருமகளே
மாசற்ற பண்புகளின் மனையகமே
ஒப்புயர்வற்ற எம் தாயகமே
இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே
கருமை அழகியே
எளிமை இலங்கும் ஏந்திழையே
புன்முறுவல் பூத்தவளே
பொன் அணிகள் பூண்டவளே
பெற்று வளர்த்தவளே
பெருமைகள் அனைத்தும் அளித்தவளே
தாயே வணங்குகிறோம்

உண்மையான மனிதன்!


நேற்றைய
கனவுகள்
முடிந்து
போவதில்லை!
இன்றும் தொடர்கிறது!
நாளையும் தொடரும்!
உண்மையான
உறவுகள்
பிரிந்து போவதில்லை!
நிழலாகவும் வருகிறது!
காலடி தடங்களாகவும்
உருப்பெறுகிறது!
அன்பான
நெஞ்சங்கள்
அழிந்து போவதில்லை!
இருந்தாலும் உடன் வருகிறது!
இறந்தாலும் உடன் வருகிறது!
நன்மை பயக்கும்
நட்புக்கள்
மரத்து
போவதில்லை!
உறவை இழக்க நேரிட்டாலும்!
உயிரை இழக்க நேரிட்டாலும்!
யாருமே
தின்னாத
பழங்கள்
உண்டு!
யாருமே
என்னாத
மனிதர்களும்
உண்டு!
சுயநலமாய்
சுற்றி திரியும்
மனிதன்
இவை நான்கையும்
பெறுவதில்லை!
மாற்றார்
மகிழ்ச்சியில்
நிறைவு
கண்ட
மனிதனோ,
இவை
நான்கையும்
வெறுப்பதில்லை!
ஏனோ!
அவனைத்தான்
யாரும் நினைப்பதில்லை!
சாலையோர
அவன் இருப்பிடங்களை
கடந்து
போகையிலும் கூட!

உன்னால் மௌனம்!


ஒரு வெற்று
காகிதத்தில்
சூரியன் தீட்டிய
ஓவியமாய்!
மஞ்சளும்ஆரஞ்சும்
கலந்த
வண்ணமயமான
வானம்!

ரசிகத்தான்
வந்தேன்!
அதில்
கரைந்து போவேன்
என்று
எண்ணவில்லை!

கரைந்து
கரைந்து
இதோ
நெடுநாட்களுக்குப் பின்
என் கவிதையை
பிரசவிக்கிறேன்!

மஞ்சளும்செந்துரமும்
இட்டு
மங்களம் நிறைந்த
ஒரு மனைவியாய்
என் கண்முன்னே!

உன் ஒளி வெள்ளத்தில்
மூழ்கும் மகளாய்
நான்!

தங்க நீரோடையில்
தனித்து நீந்தும்
தங்கச் சூரியன்!

என்னை
கண் சிமிட்டி
கேலி செய்யும்
நட்சத்திரங்கள்!

ரசனையின் இடையில்
என் மகிழ்ச்சிகளைப்
போன்று
இதுவும் சில நொடிகளே!
என்ற எண்ணம்!

மௌனம் காத்தது!
என் பேனாவும் 
என் மனமும்!

இனிய இரவு!


ஓர்
இனிய இரவின்
பிறப்பு
ஒரு பக்கம்!

இழந்து போன
அன்றைய நாளின்
ஏக்கம்
பரவிக்கொண்டு இருக்கிறது!

ஊரே அமைதியில்
உறைந்து
போகும் தருணம்!

எங்கோ
ஒலித்துக்கொண்டு இருக்கிறது!
பசியில் அழும்
பச்சிளம் குழந்தையின்
அழுகையும்!
அதையெண்ணி விசும்பும்
ஒரு ஏழ்மை
தாயின் விசும்பலும்!

அதையும் மீறி
ஒரு அடுக்குமாடி
குடி இருப்பில்
ஆடம்பர விருந்து
அமர்களபடுகிறது!

அறுசுவை உணவு!
உண்ண ஆளில்லாமல்!

தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை
அளிக்க வேண்டிய
பாரதி பிறந்த
பழம் பெரும் தமிழ்நாட்டில்
இன்றும் நிகழ்ந்து வரும்
பட்டினி சாவு!

தடுக்க ஆளுண்டோ?
வினாவும் வினாவாகிப்போகிறது!

அதற்க்கு விடை தேடும்
பொறுப்பாளர்கள்
ஆடம்பர விருந்தில்
அறுசுவை உணவருந்துவதால்!

உண்ண ஒரு கவளம்
தேடித்திரியும்
மாந்தரிடையே!

ஒரு கவளம் உண்டு
குப்பையில்
மீதம் எறியும்!
மாக்களும் உண்டு!

மதிப்பற்ற
நாகரிகம் அதனை
கருதிக்கொண்டு!
கனவில் வாழ்ந்து வரும்
இதயம் அற்ற இவர்கள்
குரல் அடக்கிப்போகிறது!

குழந்தையின் அழுகையையும்
தாயின் விசும்பலையும்!

2020 இல்!


சுகமான தென்றல்
சில்லென்று
முகத்தில் பட்டது!
அதிகாலை வேளை!

ரசிக்கத்தான்
நேரம் இல்லை!

இயந்திர யுகத்தின்
இரும்புக் கைகளில்
அகப்பட்டதனால்!

தென்றலின்
கவிதைகளை
ரசிக்க முடியாமல்
அடுப்பினின்று
கனன்று எரியும்
கனலின் கவிதை தனை
ரசிக்க போனேன்!

நேரம் ஓட
ஆரம்பித்தது!
நானும் துரத்த
ஆரம்பித்தேன்!

பேருந்துக்கு காத்திருக்க
மனம் விரும்பவில்லை!

நடக்க தொடங்கினேன்!
முன்னிரவு
ஆணி பதம் பார்த்த
பாதம் மறந்து!

பரிச்சய முகங்களின்
புன்சிரிப்புகள்!
நண்பர்களின் நலம்
விசாரிப்புகள்!

பள்ளி செல்ல அடம்
பிடிக்கும் குழந்தை!
அடித்து விரட்டும்
அம்மா!

கரும்பு சக்கையின்
கடி மணம்!
கோவில் மணி ஓசை!

சாலை அமைதியினின்று
விழிக்க ஆரம்பித்த
முன் காலை நேரம்!

வீசும் காற்றில்
சேலை தலைப்பு
சற்றே ஆட்டம் காட்ட!
அதனை பிடிக்கும்
போது தான் கண்டேன்!

சாலை ஓரம்
குடித்து விட்டு
கிடந்த இளைஞன்
ஒருவனை!

சற்றே
என் நாட்டையும்
நினைத்துக் கொண்டேன்!

2020 இல் வல்லரசாகுமா
இந்தியா?
என்று!

விடியல்!


அன்புள்ள ஆண்களே!
நீங்கள் அடிமைகளாக
நினைத்துக் கொண்டிருக்கும்
பெண்களின் மடல் இது!

விட்டு கொடுத்து
அடிமைப் பட்டம்
வாங்கிக்கொண்ட
பெருந்தகையர் நாங்கள்!

எங்களின் மென்மையை
படுக்கையில் காட்டும்
நாங்களே
எங்களின் வண்மையை
போரிலும் காட்டி இருக்கிறோம்!

மென்கரம் பற்றி
உங்கள் இல்லம்
புகுந்த நாங்கள்
அக்கரத்தால்
புரிந்த யுத்தம் பல!

சற்றே திரும்பி
பாருங்கள்
நம் தேச வரலாற்றை!

மகாராணிகளாய்
மகுடம் தரித்து
ஆண்டு வந்த
கதைகள் பல உண்டு!

அடுப்படியில் அடைந்து
கிடப்பது
அடிமை பதவிக்காக அல்ல!
உங்கள் அன்பிற்காக!

இங்கு உங்களை
சுமந்ததும் நாங்களே!
உங்கள் பிள்ளைகளை
சுமப்பதும் நாங்களே!
உங்கள் வாரிசுகளை
பெற்று தருவதும் நாங்களே!
உங்கள் பிள்ளைகளை
மனிதனாக்குவதும் நாங்களே!

மகளாய், சகோதரியாய்,
காதலியாய், மனைவியாய்,
மருமகளாய், தாயாய்,
தோழியாய், ஆசிரயையாய்,
என யாவுமாய்
உங்களோடு வாழ்ந்து
வருகிறோம்!

உங்களிடம் நாங்கள்
வேண்டுவது
பொன்னும் பொருளும் அல்ல!
அன்பும், அனுசரனையும் தான்!

பார்த்து பார்த்து
அலுத்து களைத்து
சமைத்த உணவிற்கு
ஒற்றை வார்த்தையில்,
'நல்லாயிருக்கு'
என்ற மணிமகுடம்!

வீட்டு வேலைகளில்
உதவி அல்ல!
'மறுபடியும் செய்யேன்!'
என்ற ஒற்றை வரி!

மாதம் இருமுறை
படத்திற்கோ,
வேறு எங்கோ
அழைத்து செல்ல வேண்டாம்!

மாறாக
எங்கள் பிறந்த நாளின்
முதல் மணித்துளியில்
வாழ்த்தும்
ஒற்றை முத்தமும்!

உங்கள் களைப்பை
எங்கள் மீது
சுமத்துவதை நாங்கள்
மறுக்கவில்லை!

எங்களது களைப்பினை
நாங்கள் யார் மீது சுமத்த?

உங்கள் வானில்
நாங்கள் விடியல் தந்தோம்!
எங்கள் வானில்
விடியல் தர
முனைவீர்களா!

ஒரு நாளேனும்
சிந்தியுங்கள்!

என் மனைவிக்கு
எது பிடிக்கும்?
என் மகள்
எதை விரும்புவாள்?
என் தங்கைக்கு
பிடித்த உடை எது?
என் அம்மாவிற்கு
எத்தனை வயது?
என் காதலி
என்ன செய்வாள்?

என்ற கேள்விகளின்
வழியாக!

அப்போது கிடைக்கும்
எங்களது வானிற்கு
உண்மையான விடியல்!

காதல்!


ஒரு நாள் இரவு
ஊரே உறங்கி
கொண்டிருந்தது!



மெதுவாக
தன் காதலியை
காண அவன்
திருடனைப் போல்
பதுங்கி வந்து கொண்டு
இருந்தான்!


இருளும் தன்
பரப்பை
அதிகரித்துக் கொண்டே போனது!
அவளும் மெல்ல
தன் வீட்டிலிருந்து
எட்டி பார்த்தாள்!


பார்வைகள் சங்கமித்தன!
காதல்
பெருக்கெடுத்தது!


அந்த வெள்ளம்
இரவையும் பகலாகிப் பார்த்தது!
இரவெல்லாம்
தன் காதலனிடம்
மயங்கி கிடந்த
அவளை மீட்க
ஆரம்பித்தது!


புலரும் காலை!
புணர்ச்சி அறுபட
காதலன்
விடை பெறத் துவங்கினான்!


ஏதோ மனதில் பட
அவனது பிரிவு புரிந்தது!
தங்க மாட்டதவளாய்
அவள் அமிழ்ந்து போனாள்!
நீரினுள்!


ஒரு காதல்
விடியலுக்குள் மரணம் எய்தியது!


அடுத்த நாள்
தன் காதலியை காண
அவன் வந்தான்!
அவளை காணாது
காத்திருக்க அரம்பித்தான்!


அவள் நினைவால்
தேய்ந்தான்!
இறுதியில் மாண்டும் போனான்!


அவனை அவள்
சந்தித்தாள்!
சொர்க்கத்தில்!


கடவுள் அவர்களுக்காய்
வரம் தந்தார்!
மீண்டும் ஜனிக்க!


ஜனித்தனர்!
இப்புவியில்!
காதலித்தனர்!


மீண்டும் மரணம்!
மீண்டும் ஜனிப்பு!

இறுதிவரை
காதல் இருந்ததால்!
அவள் ஒரு நாளும்
அறியவில்லை!

அவள் இல்லாத
அந்நாட்களில் அவன்
மற்றவளையும்
நேசித்தான்!
என்பதை!

( அல்லியையும் சந்திரனையும் பார்க்கையில் புரிந்த ஒரு புதிர்! )

காதலில் இருவரும் உண்மையாய் இருப்பதில்லை!
அல்லது ஒருவராவது உண்மையாய் இருப்பதில்லை!
சுயநலமாய் மாறிப் போகும்
இன்றைய காதல் மத்தியில்
காதலுக்காய் உயிர் துறந்த
ஹரின்-திலோத்தியை
நான் என்றும் மறப்பதில்லை!

எல்லாமே உன்னாலா?


 அவசரமான

ஒரு மாலை பொழுது!
பரபரப்பான ஒரு
சாலையை கடக்கும் போது!
யாரோ உன் பெயர்
சொல்லி அழைக்கக் கேட்டேன்!
யாரோ ஒரு காதலி
தன் காதலனை அழைத்தாள்!
ஏனோ அவள் மேல்
கோபம் வந்தது!
அப்படியே நின்று விட்டேன்!
நட்ட நடு சாலையில்!
சறுக்கிச் செல்லும்
வாகனங்கள் மத்தியில்!
பின்னால் வந்த
தோழி தோளைத் தட்டி
கூட்டி வந்தாள்!
உன்னை காதலிக்க
மட்டுமே செய்தேன்!
என்றிருந்த எனக்கு
அப்போதுதான் புரிந்தது!
உன் மீது பைத்தியமும்
ஆனேன் என்று!
இது எல்லாமே
உன்னாலா?
அன்றேல் என்
விதியாலா?